ஆதிவாசி மக்கள் 3 பேரின் வீடுகள் இடிந்தன
கோத்தகிரி பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஆதிவாசி மக்கள் 3 பேரின் வீடுகள் இடிந்தன. அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஆதிவாசி மக்கள் 3 பேரின் வீடுகள் இடிந்தன. அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பலத்த மழை
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கடும் குளிர் நிலவுவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இது தவிர சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வரும் வெளியூரை சேர்ந்தவர்கள் சிரமம் அடைகின்றனர்.
வீடுகள் இடிந்தன
இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக கோத்தகிரி அருகே கொணவக்கரையில் உள்ள செம்மனாரையை சேர்ந்த மாசனன் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதேபோன்று ஜக்கனாரையில் சுண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவகுமார் மற்றும் குமுதா ஆகியோரது வீடுகளின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. இந்த வீடுகளில் இருந்தவர்கள் வேறு அறையில் இருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நிவாரண தொகை
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் வீடு இடிந்து பாதிக்கபட்ட ஆதிவாசி மக்களான 3 பேருக்கும், அரசு வழங்கும் நிவாரண தொகையான 4,100 ரூபாயை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.