குடும்பத்தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கணவர்
குடும்பத்தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்தார்.
திருக்கழுக்குன்றம்,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பெரிய காட்டுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 36). இவரது மனைவி ஈஸ்வரி (27). இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளான்.
இந்த நிலையில் சங்கர் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் அடிக்கடி ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இநத நிலையில் நேற்று வீட்டுக்கு சென்ற சங்கர் தன்னுடைய மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கொலை
ஒரு கட்டத்தில் மனைவி ஈஸ்வரியிடம் தகராறு அதிகமானதால் ஆத்திரம் அடைந்த சங்கர் ஈஸ்வரியின் தலையை பிடித்து சுவரில் முட்டியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஈஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சங்கரை தேடி வருகின்றனர்.