போதையில் மனைவியை துன்புறுத்திய கணவன் சரமாரி வெட்டிக்கொலை
வாணியம்பாடி அருகே குடிபோதையில் தினமும் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த கணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
குடும்ப தகராறு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). விவசாயி. இவரது மகன் சசிகுமார் (48). தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தை கவனித்து வந்தார். இவருக்கு லட்சுமி (45) என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர்.
சசிகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அவர் மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது அவர் போதையில் மனைவி மற்றும் மகள்கள், மகனிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். தன்னை அடித்து துன்புறுத்தினாலும் மகள்கள் மற்றும் மகனுக்காக பொறுமையுடன் கணவனுக்கு, லட்சுமி பணிவிடை செய்து வந்தார். அவருக்கு மாமனார் சுப்பிரமணி ஆறுதல் கூறி தேற்றி வந்தார்.
கொலை
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சசிக்குமார் வழக்கம்போல் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். போைத தலைக்கேறிய அவர் மனைவி லட்சுமியை தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கணவரின் அடி-உதையை தாங்க முடியாமல் லட்சுமி கதறி அழுது புரண்டார். இதனை பார்த்த சுப்பிரமணி மகனை கண்டித்து அறிவுரை கூறி அமைதிப்படுத்தம் முயற்சியில் ஈடுபட்டார்.
அதன்பின்னரும் தகராறு தொடர்ந்தது. பின்னர் குழந்தைகள் தூங்கினர். நேற்று அதிகாலை 3 மணியளவில் மீண்டும் லட்சுமியுடன் சசிகுமார் தகராறு செய்து கொடூரமாக தாக்கினார். அப்போது எழுந்த தந்தை சுப்பிரமணி பொறுமையை இழந்தார். தன் கண்எதிரே லட்சுமியை மகன் தாக்கியதால் அவரிடமிருந்து விலக்க முயன்றார். ஆனால் தந்தையையும் அங்கிருந்து விரட்ட முயன்றார்.
உடனே அங்கிருந்த அரிவாளை எடுத்த அவர் சசிகுமாரை மகனென்றும் பாராமல் வெட்டினார். மருமகள் லட்சுமியும் கணவனை பிடித்துக்கொள்ளவே இருவரும் சேர்ந்து சசிகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இதில் அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு போனதோடு அந்த இடமே ரத்த வெள்ளமானது.
போலீசார் விரைவு
இந்த படுகொலை குறித்து அறிந்த திம்மாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று சசிகுமாரின் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
அதனை தொடர்ந்து சசிகுமாரை கொலை செய்த அவரது மனைவி லட்சுமி, தந்தை சுப்பிரமணி ஆகியோரை அவர்கள் கைது செய்தனர். பின்னர் சசிகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மனைவி லட்சுமி மற்றும் தந்தை சுப்பிரமணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருமகளை தன் கண்ணெதிரிலேயே கொடுமை ெசய்ததை பார்த்து மகனை தந்தையே சேர்ந்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.