வருமான வரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது
திருவண்ணாமலையில் நடைபெற்ற வருமான வரித்துறையின் புதிய அலுவலகம் திறப்பு விழாவில், "வருமான வரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது" என்று முதன்மை தலைமை ஆணையர் இரா.ரவிச்சந்திரன் கூறினார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற வருமான வரித்துறையின் புதிய அலுவலகம் திறப்பு விழாவில், "வருமான வரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது" என்று முதன்மை தலைமை ஆணையர் இரா.ரவிச்சந்திரன் கூறினார்.
புதிய அலுவலக கட்டிடம் திறப்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.4 கோடியே 14 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட திருவண்ணாமலை வருமான வரித்துறை அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் இரா.ரவிச்சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலையில் புதிய வருமான வரி அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் செயல்படக்கூடிய இந்த அலுவலகத்தில் அனைத்து விதமான வருமான வரி தொடர்பான சேவைகளை பெறலாம்.
பெரும்பாலும் வருமான வரி தொடர்பான பணிகளுக்கு இங்குள்ள மக்கள் வேலூர் அல்லது சென்னை செல்ல வேண்டி இருந்தது. ஆனால் இனி இந்த சேவைகளை திருவண்ணாமலையிலேயே பெற்று கொள்ளலாம்.
வருமான வரிக்கு திருவண்ணாமலை மண்டலம் முக்கியமானது. வருவான வரி வசூல் அதிகம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ள பகுதியாகும். தமிழ்நாட்டில் 25 லட்சம் பேர் வருமான வரி செலுத்துகின்றனர்.
மொத்த இந்தியாவில் 7 கோடி பேர் வரி செலுத்துகின்றனர்.
90 சதவீதம் இணைப்பு
வருமான வரி வசூலில் இந்தியா அளவில் தமிழ்நாடு 4-வது இடத்தில் உள்ளது. வருமான வரி செலுத்தாத யாரையும் விடுவதில்லை.
பான் கார்டு மற்றும் தொழில்நுட்பம் மூலமாக பணம் முதலீடு, சொத்து விவரம் மற்றும் வெளிநாடு பயணம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பான் கார்டு எண்ணுடன் ஆதார் கார்டு எண் 90 சதவீதம் இணைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் ரூ.82 ஆயிரம் கோடி வருமான வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அப்போது ரூ.1 லட்சம் கோடி வசூலித்து உள்ளோம். நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை வருமான வரியாக ரூ.88 ஆயிரம் கோடி வசூலித்துள்ளோம். இன்னும் ரூ.20 ஆயிரம் கோடி வசூலிக்க வேண்டும்.
சுதந்திரமான செயல்படுகிறது
வருமான வரித்துறை சோதனை சாதாரணமாக செய்து விட முடியாது. இதற்கு ஒன்று அல்லது 2 வருடங்கள் திட்டமிடப்பட்டு பின்னர் தான் செயல்படுத்த முடியும்.
வருமான வரித்துறையில் அரசியல் தலையீடு உள்ளது என்று யார் வேண்டும் என்றாலும் சொல்லலாம். அவ்வாறு கிடையாது. வருமான வரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வருமான வரி தலைமை இயக்குனர் சுனில் மாத்துரு, தலைமை ஆணையர் ஜெயந்தி கிருஷ்ணன், முதன்மை ஆணையர் சஞ்சய்குமார், ஆணையர் பழனிவேல் ராஜன், கூடுதல் ஆணையர் வித்யாதர், கண்காணிப்பு பொறியாளர் லோகன்டே உள்பட வருமான வரித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.