சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்


சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்
x

காட்பாடியில் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

வேலூர்

அமைச்சர்கள் ஆய்வு

வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் டெல் வெடிமருந்து தொழிற்சாலை இருந்த 77 ஏக்கர் இடத்தில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுக்கு தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவன மேலாண்மை இயக்குனர் சுந்தரவல்லி தொழிற்பேட்டை திட்டம் குறித்து விளக்கி கூறினார்.

பின்னர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொழிற்பேட்டை

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணியை ஆய்வு செய்தேன். அங்கு சில குறைபாடுகள் இருந்தது. அவற்றை நிவர்த்தி செய்ய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். இன்னும் 9 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டுவிடும்.

காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் தற்போது முதற்கட்ட ஆய்வு நடந்துள்ளது. இங்கே தொழிற்பேட்டை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அருகிலேயே வனப்பகுதி உள்ளதால் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

உலக முதலீட்டாளர் மாநாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமான முறையில் மாநாடு நடைபெறும். இளைஞர்களுக்கு இந்த மாநாடு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கும். உலகத்தில் பல தொழில்கள் எப்படி வளர்ந்து வருகிறது, புதிய தொழில்நுட்பம் எப்படி வளர்கிறது என பல முக்கிய நிறுவனங்களின் ஆய்வாளர்கள் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். இளைஞர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

இப்போது நாம் எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளோம். மின் சாதன வாகனங்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறோம். தமிழ்நாடு தொழில் துறையானது புதிய தொழில்நுட்பம், புதிய எரிசக்தி ஆகியவற்றை உருவாக்கும் நோக்கத்தில் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, திட்ட இயக்குனர் ஆர்த்தி, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக அவர் வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் நடைபெறும் தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story