புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை


புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்று ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

மன்னார்குடி:

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்று ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்..

பேட்டி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொள்ள வந்த த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு என்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. இந்த விழாவில் எதிர்க்கட்சியினர் அரசியல் காரணங்களுக்காக கலந்து கொள்ளாதது நல்ல முடிவு அல்ல.

பிரதமர்கள் திறந்து வைத்துள்ளனர்

நாடாளுமன்ற வளாகத்தில் புதிய கட்டிடங்கள், நூலகங்களை முன்னாள் பிரதமர்கள் திறந்து வைத்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற கட்டித்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதிலே எந்த தவறும் இல்லை. இது ஜனநாயகத்திற்கு இது உட்பட்டது தான். நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானதும் அல்ல.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி, செங்கோலை நிறுவ இருப்பதாக கூறப்படுகிறது. இது தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

விதை நெல்

மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையிலே விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், வேளாண் இடுபொருட்கள் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கடைமடைவரை தண்ணீர் செல்லக்கூடிய நிலையை உறுதி செய்ய வேண்டும். காவிரியில் கர்நாடகத்தில் இருந்து பெற வேண்டிய தண்ணீரை பெற்று தர தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் மற்றும் தஞ்சையில் மதுபானம் குடித்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதையெல்லம் பார்த்து கொண்டு தி.மு.க. கூட்டணி கட்சிகள் மவுனமாக உள்ளது. மதுவிற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தமிழ் மாநில காங்கிரஸ் நடத்தி வருகிறது.

நிவாரணம் வழங்க வேண்டும்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் பொருளாதார ரீதியாக தமிழகத்திற்கு பயன்தர வேண்டும். கோடை மழையினால் பருத்தி பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கராஜன், மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், வட்டார தலைவர் முனியப்பன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story