காப்பீட்டு நிறுவனம், கிளை மேலாளர் வாடிக்கையாளருக்கு ரூ.1.20 லட்சம் வழங்க வேண்டும்


காப்பீட்டு நிறுவனம், கிளை மேலாளர் வாடிக்கையாளருக்கு ரூ.1.20 லட்சம் வழங்க வேண்டும்
x

விபத்து வழக்கில் உரிய இழப்பீடு வழங்காததால் காப்பீட்டு நிறுவனம், கிளை மேலாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 182 வழங்க வேண்டும் என்று மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர்

கடலூர்,

சிதம்பரம் அசத்கான் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). வக்கீல். இவர் கடந்த 2.8. 2014 அன்று சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அந்த கார் கிண்டி அருகே பாலத்தில் சென்ற போது விபத்துக்குள்ளானது. இதையடுத்து அவர் தான் இன்சூரன்ஸ் செய்திருந்த சிதம்பரத்தை சேர்ந்த நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்திடம் தகவல் தெரிவித்து விட்டு சென்னையில் உள்ள கார் பழுதுபார்க்கும் மையத்தில் காரை நிறுத்தி பழுது பார்த்தார்.

இதற்காக 85 ஆயிரத்து 187 ரூபாய் செலவு செய்தார். அந்த தொகையை கேட்டு ராஜேந்திரன் காப்பீட்டு நிறுவனத்திற்கு மனு அனுப்பினார். இதையடுத்து அந்த நிறுவன அலுவலர்கள் ஆய்வு செய்து 52 ஆயிரத்து 791 ரூபாய் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்காமல் காலம் தாழ்த்தியது.

இழப்பீடு வழங்க உத்தரவு

இதையடுத்து அவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று அவர்கள் தீர்ப்பு கூறினர். அந்த தீர்ப்பில், சேவை குறைபாடு, மன உளைச்சல், பழுதுபார்த்த செலவு தொகை என 1 லட்சத்து 20 ஆயிரத்து 187 ரூபாயை வக்கீல் ராஜேந்திரனுக்கு சென்னை தலைமை இன்சூரன்ஸ் நிறுவனம், சிதம்பரம் இன்ஸ்சூரன்ஸ் கிளை மேலாளர் ஆகிய 2 பேரும் சேர்ந்து இழப்பீடாக வழங்க உத்தர விட்டனர். 2 மாதத்தில் இழப்பீட்டு தொகையை வழங்காவிட்டால் 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் உத்தரவிட்டனர்.


Next Story