இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே உள்ள தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்துவேல் குமார். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் தனது ஆட்டோவிற்கு இன்ஸ்சூரன்ஸ் செய்திருந்தார். அதோடு சேர்த்து அவருக்கும் தனிநபர் விபத்து காப்பீடு பாலிசியும் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் மணக்குடி அருகே நடந்த விபத்தில் லாரி மோதி முத்துவேல் குமார் இறந்து விட்டார்.
இதற்கான இழப்பீட்டுத் தொகையை தருமாறு அவரது மனைவி விஜயா மற்றும் இரு குழந்தைகள் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் முறையான காரணம் தெரிவிக்காமல் இழப்பீட்டுத் தொகையை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் வழங்க மறுத்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட விஜயா வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக விஜயா, குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி மரணமடைந்த முத்துவேல் குமாரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சமும், நஷ்ட ஈடாக ரூ.15 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறினர்.