குருபூஜை விழாவுக்கு தேவர் தங்கக்கவசத்தை எடுக்கும் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு


குருபூஜை விழாவுக்கு தேவர் தங்கக்கவசத்தை எடுக்கும் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கைக்கு  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு
x

முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கான தங்கக்கவசத்தை வங்கியில் இருந்து எடுக்கும் விவகாரம் சம்பந்தமான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கைக்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர்.

மதுரை


முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கான தங்கக்கவசத்தை வங்கியில் இருந்து எடுக்கும் விவகாரம் சம்பந்தமான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கைக்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர்.

அ.தி.மு.க.வின் தங்கக்கவசம்

அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு 2014-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்கக்கவசத்தை வழங்கினார். இந்த தங்கக்கவசம், மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அ.தி.மு.க. மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜைக்கு 3 நாட்களுக்கு முன்பு தங்கக்கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச் சென்று பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அணிவித்து பின் மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம்.

இதற்காக அ.தி.மு.க. பொருளாளரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்கக்கவசத்தை பெற்றுச்செல்வார்கள். தற்போது அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்கக்கவசத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் தற்போதைய அ.தி.மு.க. பொருளாளராக உள்ள எனக்குத்தான் தங்கக்கவசத்தை வங்கியில் இருந்து பெறும் அதிகாரம் உள்ளது. எனவே முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையையொட்டி தங்கக்கவசத்தை எங்களிடம் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இருதரப்பினரும் எதிர்ப்பு

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல்கள் விஜய்நாராயண், தமிழ்செல்வம் ஆகியோர் ஆஜராகி, அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை பிரச்சினை எழுந்தபின்பு பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவினால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அக்கட்சியின் பொருளாளராக மனுதாரரான சீனிவாசன் உள்ளார். அவரிடம் தேவர் சிலைக்கான தங்கக்கவசத்தை ஒப்படைக்க வங்கி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் தங்கக்கவசத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் செல்லப்பாண்டியன், வக்கீல்கள் பாஸ்கரபாண்டியன், சுப்புரத்தினம் ஆகியோர் ஆஜராகி, அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகள் உருவாக்கப்பட்டது. இந்த பதவிகள் குறித்த பிரச்சினையில் தலையிட விரும்பவில்லை என ஐகோர்ட்டு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

எனவே மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் எங்கள் தரப்பையும் சேர்க்கக்கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும். மனுதாரர் தரப்பினரிடம் தங்கக்கவசத்தை வழங்கக்கூடாது, என எதிர்ப்பு தெரிவித்தனர்.

26-ந்தேதி விசாரணை

இதேபோல முத்துராமலிங்கத்தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் தரப்பிலும், தங்கக்கவசம் வைக்கப்பட்டு உள்ள வங்கி தரப்பிலும், கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்றுகிறோம் என தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, "ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்படுகிறது. அடுத்த கட்ட விசாரணை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்றார்.


Next Story