மாணவிகளை விடைத்தாளுடன் முகப்பு சீட்டு தைக்க ஈடுபடுத்திய விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்-முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை


மாணவிகளை விடைத்தாளுடன் முகப்பு சீட்டு தைக்க ஈடுபடுத்திய விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

சேலம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு

பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கான விடைத்தாளுடன் புகைப்படம், பதிவு எண் ஆகியவை அடங்கிய முகப்புச்சீட்டு தைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்திலும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளில் அந்தந்த பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்றால் அருகில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை இந்த பணிக்கு பயன்படுத்துவது வழக்கம்.

பணியிடை நீக்கம்

இந்த நிலையில் சேலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாளுடன், முகப்பு சீட்டுகளை மாணவிகளே தைப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று முன்தினம் பரவியது. தொடர்ந்து மாணவிகளை விடைத்தாளுடன் முகப்புச்சீட்டை தைக்க வைத்த அரசு பள்ளி எது? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த சம்பவம் சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி, தையல் ஆசிரியை செல்வி ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டுள்ளார்.

பரபரப்பு

அரசு பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நேரத்தில் விடைத்தாளுடன் முகப்பு சீட்டு தைக்கும் விவகாரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story