மோட்டார் சைக்கிள்களை வேகமாக செலுத்திய விவகாரம்:தட்டிக்கேட்ட வியாபாரி மீது தாக்குதல்
உடன்குடி கிறிஸ்தியாநகரத்தில் மோட்டார் சைக்கிள்களை வேகமாக செலுத்திய விவகாரம்: தட்டிக்கேட்ட வியாபாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி கிறிஸ்தியாநகரத்தில் ஊருக்குள் மோட்டார் சைக்கிள்களை வேகமாக செலுத்தியதை தட்டிக்கேட்ட வியாபாரியை தாக்கிய கல்லுரி மாணவர்கள் உட்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
வியாபாரி
உடன்குடி கிறிஸ்தியாநகரம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் இஸ்ரவேல் மகன் ராஜசிங் (வயது 40). வியாபாரி. இவர் தவணை முறையில் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லுரி மாணவர்களான ஆல்வின் மகன் நூவின், அகஸ்டின் மகன் ஷ்யாம் ஆகிய இருவரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் போட்டி போட்டு கொண்டு ஊருக்குள் வேகமாக சென்றுள்ளனர். இதை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ராஜாசிங் கண்டித்துள்ளார்.
தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த நூவின், ஷ்யாம், அவரது உறவினர் செல்வகுமார் மகன் ஜெரிஸ் ஆகிய 3 பேரும் அந்த பகுதிக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ராஜசிங்கை அடித்து உதைத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி, தந்தை இஸ்ரவேல், தாய் கலாவதி ஆகியோரும், அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்துள்ளனர். இதை கவனித்த அந்த 3 பேரும் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். காயங்களுடன் தரையில் கிடந்த ராஜசிங்கை அவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 பேருக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து ராஜசிங் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டிணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3பேரையும் தேடிவருகின்றனர்.