விழுப்புரம் நகை தொழிலாளி கொலை வழக்கைசி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்கலெக்டரிடம் உறவினர்கள் மனு


விழுப்புரம் நகை தொழிலாளி கொலை வழக்கைசி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்கலெக்டரிடம் உறவினர்கள் மனு
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகை தொழிலாளி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.

விழுப்புரம்


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் மனைவி லட்சுமி என்பவர் நேற்று தனது உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது சகோதரர் ஏழுமலை, விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள ஒரு நகை பட்டறையில் நகை தொழிலாளியாக வேலை செய்துவந்தார். அவர், தனக்கு தெரிந்தவர்களிடமிருந்து 60 கிராம் தங்கத்தை கடனாக வாங்கியிருந்தார்.

இதனை திருப்பிக்கேட்டபோது என்னிடம் வந்து உதவி செய்யுமாறு கூறினார். ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்றேன். பின்னர் மண்டகப்பட்டை சேர்ந்த உறவினர் நாகராஜன் என்பவரிடம், எனது சகோதரர் ஏழுமலை 3 தவணைகளாக ரூ.18 லட்சத்தை கொடுத்திருந்தார்.

அடித்து கொலை

தங்கம் கொடுத்தவர்களிடம், தனது உறவினரிடம் கொடுத்த பணத்தை வாங்கி திருப்பிக்கொடுத்து விடுவதாக கூறினார். ஆனால் நாகராஜ், அந்த பணத்தை கொடுக்காமல், எங்களுக்கு சொந்தமான பூர்வீக வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுத்துவிட்டால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும் என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தார்.

அவர், பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால் இதுபற்றி விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் நாங்கள் அளித்த புகார் மீது போலீசார் முறையாக விசாரணை செய்யவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி ராஜேந்திரன், கார்த்திக், அருண் உள்ளிட்டவர்கள் எனது சகோதரர் ஏழுமலையை அடித்து உதைத்து அவரது கை, கால்களை கட்டிப்போட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வெங்கனூரில் உள்ள ஒரு கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் கைதுசெய்தனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இதற்கெல்லாம் முக்கிய காரணம், விழுப்புரம் நகர போலீசார் முறையாக விசாரிக்காமலும், நாராஜிடம் இருந்து பணத்தை பெற்றுத்தராமல் அவருக்கு ஆதரவாக செயல்பட்டதும்தான். எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.


Next Story