கல்குவாரி சுற்றுச்சுவர் இடிந்து சாலையில் விழுந்தது


கல்குவாரி சுற்றுச்சுவர் இடிந்து சாலையில் விழுந்தது
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே கல்குவாரி சுற்றுச்சுவர் இடிந்து சாலையில் விழுந்தது

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலையில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் சித்திரங்கோட்டை அடுத்துள்ள சாண்டம் பகுதியில் கல்குவாரி உள்ளது. இங்கு ஜல்லி, பாறைப்பொடி தயாரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பாறை துகள்கள் காற்றில் பறந்து சாலைக்கு வருவதை தடுக்க கல்குவாரியில் உயரமான சுற்றுச்சுவர் கட்டி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் கல்குவாரியின் சுற்றுச்சுவர் திடீரென்று இடிந்து சுமார் 30 அடி தூரத்துக்கு சாலையில் விழுந்தது. அப்போது அருகில் இருந்த மின்கம்பமும் முறிந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. சாலையில் தக்கலையில் இருந்து குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை மின்வாரிய உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதே சமயம் கொற்றிக் கோடு போலீசாரும் வந்து, தக்கலையில் இருந்து வந்த வாகனங்களை சித்திரங்கோட்டில் இருந்து மாற்றுபாதை வழியாக திருப்பி விட்டனர். அதைத்தொடர்ந்து சாலையில் கிடந்த இடிபாடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்த போது சாலையில் வாகனங்களோ, ஆட்களோ செல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story