கந்துவட்டி கேட்டு மிரட்டியதால் தொழிலாளி விஷம் குடித்தார்


கந்துவட்டி கேட்டு மிரட்டியதால் தொழிலாளி விஷம் குடித்தார்
x

களக்காடு அருகே கந்துவட்டி கேட்டு மிரட்டியதால் தொழிலாளி விஷம் குடித்தார். இதுதொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் பெண் பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதுவரைக்குளம் தெற்கு ெதருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 50), தொழிலாளி. இவர் அதே ஊரைச் சேர்ந்த கணபதி மனைவி ராணி (60) என்பவரிடம் குடும்ப செலவுக்காக ரூ.1.60 லட்சம் கடனாக வாங்கியதாகவும், இதற்கு மாதம் தோறும் ரூ.9 ஆயிரம் வட்டி கட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த மாதம் வட்டி பணத்தில் ரூ.3,500 கொடுத்த ஜெயக்குமார் மீதி பணத்தை பின்னர் தருவதாக கூறியிருந்தார். கடந்த 31-ந் தேதி ராணி, அவரது கணவர் கணபதி (70), மகள் சுமதி (40), மருமகள் முத்துலட்சுமி (38) ஆகிய 4 பேரும் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த அவரை அவதூறாக பேசி கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயக்குமார் அன்று இரவே விஷம் குடித்து மயங்கினார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தனர். ராணி, கணபதி, முத்துலட்சுமி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதில் ராணி காங்கிரஸ் கட்சியில் பிரமுகராகவும், முத்துலட்சுமி கள்ளிகுளம் பஞ்சாயத்து துணை தலைவராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story