நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்ப பெற வேண்டும்
நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மூலம் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்படும் என்று மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டியளித்தார்.
மன்னார்குடி:
நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மூலம் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்படும் என்று மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டியளித்தார். இதுகுறித்து அவர்அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பேட்டி
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால் இது கருப்பு பண பதுக்கள்காரர்களுக்கு மறைமுக துணை போவதாக அமைந்து விடக்கூடாது. உரிய கால அவகாசம் கொடுத்து நிறைவேற்ற முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் அழிக்க வல்லது. நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்டவற்றை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் அடிப்படை நோக்கம் கொண்டதாகும்.
தமிழ்நாடு பேரழிவை சந்திக்கும். இச்சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மூலமாக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்ப உள்ளோம். இதனை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் இச்சட்டத்தை திரும்பப்பெற முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் சட்டமன்றத்தில் விவாதம் இன்றி மறைமுகமாக குரல் வாக்கெடுப்பு என இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில்
எனவே சட்டமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திற்கு அனுமதி கொடுக்கக்கூடாது என கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம். அதற்காக அனுமதியும் கேட்டிருக்கிறோம். காவிரி, தென்பெண்ணை ஆறுகளை கர்நாடகம் கழிவுநீர் கால்வாயாக மாற்றிவருகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்கள் பேரழிவை சந்திக்கப் போகிறார்கள்.
இது குறித்து வாய் திறக்க தமிழக அரசு மறுப்பதால் தமிழகம் பேரழிவை சந்திக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட மாநிலங்களோடு அவசரகால கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.