நில அளவை செய்து சாலை அமைக்க இடம் ஒதுக்க வேண்டும்
வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவிப்பதால், பெரியூரில் நில அளவீட்டு பணியை மேற்கொண்டு சாலை அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. இதையடுத்து திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பெரியூரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்துக்கு சாலை வசதி கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் சாலை அமைக்கப்படவில்லை. எனவே நாங்களே சாலை அமைக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினோம். ஆனால் சாலை அமைந்துள்ள இடம் வன எல்லைப்பகுதிக்குள் வருவதாக கூறி வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே பெரியூரில் நில அளவீட்டு பணியை மேற்கொண்டு சாலை அமைக்க இடம் ஒதுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த அடியனூத்து சலவை காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதி மக்களுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதுடன், எங்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
மெழுகுவர்த்தி ஏந்தி...
தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ்பாபு என்பவர் ஒரு கையில் மெழுகுவர்த்திகளை ஏந்தியும், மறுகையில் கோரிக்கை மனுக்களை பிடித்தபடியும் கலெக்டர் அலுவலகம் வந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை தடுத்து விசாரித்தனர். அப்போது பல்வேறு பிரச்சினைகளுக்காக பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அரசு அலுவலகங்களில் எனது கோரிக்கைகள் மெழுகுவர்த்தி போல் உருகி வருகிறது என்பதை தெரிவிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு கொடுங்கள், அதை விடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். பின்னர் கூட்ட அரங்குக்கு சென்ற கணேஷ்பாபு, கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தார்.
172 மனுக்கள்
நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 172 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் நீரில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.