நிலவை நெருங்கிய நிலையில் லேண்டரின் வேகமும், உயரமும் படிப்படியாக குறைப்பு
நிலவை நெருங்கிய நிலையில் தரையிறங்கும் லேண்டரின் வேகத்தையும், உயரத்தையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் படிப்படியாக குறைத்து வருகின்றனர்.
சென்னை,
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி எல்.வி.எம்.3 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.
இந்த விண்கலம் புவிவட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக சுற்றிவந்தது. தற்போது நிலவு சுற்றுவட்டப் பாதையிலும் தன்னுடைய பயணத்தை வெற்றிகரமாக முடிக்கும் தருவாயில் உள்ளது.
உயரம்,வேகம் குறைப்பு
சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து நேற்று முன்தினம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு புவிவட்ட சுற்றுப்பாதையில் குறைந்தபட்சம் 153 கிலோ மீட்டர், அதிகபட்சம் 163 கிலோ மீட்டர் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவருகிறது.
இந்த நிலையில் தற்போது நிலவு சுற்றுவட்டப் பாதையில் மேலும் குறைந்தபட்சம் 113 கிலோ மீட்டர், அதிகபட்சம் 157 கிலோ மீட்டர் என்ற தூரத்தில் விண்கலம் சுற்றிவரும் வகையில் அதன் உயரம் குறைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் லேண்டர் வேகமும் தற்போது படிப்படியாக பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து குறைக்கப்பட்டு வருகிறது. அடுத்த உயரம் குறைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
விக்ரம் லேண்டரில் 8 சென்சார்கள்
திட்டமிட்டபடி வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5.47 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் லேண்டர் தரையிறங்குகிறது. இந்த லேண்டரில் ஆய்வுப்பணிக்காக 8 சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை தற்போது நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க இருக்கும் பகுதிகளை புகைப்படங்கள் எடுத்து அனுப்பிவருகின்றன.
அந்த வகையில், லேசர் இன்டர்ஷியல் ரெபரன்சிங் மற்றும் முடுக்கமானி தொகுப்பு, கா-பேண்ட் அல்டிமீட்டர் (காரா), லேண்டர் நிலை கண்டறிதல் கேமரா, லேண்டர் அபாயக் கண்டறிதல்-தவிர்ப்பு கேமரா, லேசர் அல்டிமீட்டர், லேசர் டாப்ளர் வெலோசிமீட்டர் (எல்.டிவி), லேண்டர் கிடைமட்ட வேக கேமரா, மைக்ரோ ஸ்டார் சென்சார், இன்க்ளினோமீட்டர்-டச் டவுன் சென்சார்கள் ஆய்வுப்பணியில் ஈடுபட உள்ளன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடு
நிலவின் தென்துருவத்தில் லேண்டர் வருகிற 23-ந் தேதி தரையிறங்கும் காட்சியை மாணவர்களும் பொதுமக்களும் காணும்வகையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் திரைகட்டி நேரடியாக விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர்.