மண் சரிவால் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது
குன்னூரில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மண் சரிவால் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது.
குன்னூர்,
குன்னூரில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மண் சரிவால் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது.
கனமழை
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை வெயில் அடித்து வந்தது. இதனால் தோட்டங்களில் பயிர்கள் வாடின. மேலும் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி நோய் தாக்கியது. இதற்கிடையில் கடந்த 3 நாட்களாக குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் குன்னூரில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை தொடர்ந்து கனமழையாக பெய்தது. இதனால் குன்னூர் நகரில் உள்ள ஆறுகள், நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை லெவல் கிராசிங்கில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். ஊட்டி-குன்னூர் சாலை கேத்தி மைனலை சந்திப்பு பகுதியில் விரிவாக்க பணி நடைபெற்று வந்தது.
கனமழை காரணமாக அந்த சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் பொக்லைன் எந்திரம் பயன்படுத்தி சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
மண் சரிவு
குன்னூர் சந்திரா காலனி பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த பணி முழுமை பெறாமல் பாதியில் நிற்கிறது. கனமழையால் அப்பகுதியில் மழைநீர் ெசல்ல வழியில்லாமல் மண்சரிவு ஏற்பட்டது. அதே பகுதியில் யூசப் என்பவரது வீட்டின் கழிவறைக்குள் வெள்ளம் புகுந்தது. மண் சரிந்து தண்ணீர் வீட்டிற்குள் புகுந்தது. அது ஆர்ப்பரித்து கொட்டியது போல் காட்சி அளித்தது.
இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. அங்கு ஒரு வீடு அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. எனவே, தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். குன்னூர் பகுதியில் கோடை மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.