விபத்தில் காயமடைந்த வக்கீலுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
பெரம்பலூரில் விபத்தில் காயமடைந்த வக்கீலுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்து
பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 60). வக்கீலான இவர் தனக்கு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் ராயல்ஸ் சாலையில் உள்ள ஆதித்ய பிர்லா மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.25 லட்சத்திற்கு விபத்துக்காப்பீடு பெற்றிருந்தார். அதற்கான பிரீமியத் தொகையையும் முறைப்படி செலுத்தி வந்திருந்தார். இந்த நிலையில் இளங்கோவன் தனது நண்பரும், வக்கீலுமான அண்ணாதுரையுடன் கடந்த 4.8.2020 அன்று பெரம்பலூரில் ஆத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பெட்டிக்கடையில் மோதி விபத்துக்குள்ளானது. அங்கு பலகாரம் சுட்டுக்கொண்டிருந்த சட்டியில் இருந்த சூடான எண்ணெய் இளங்கோவன் மீது பட்டதில் அவருக்கு தீக்காயமும், தோள்பட்டை, மார்பு, முதுகு பகுதியில் பலத்தகாயமும் ஏற்பட்டது. மேலும் பின்னால் உட்கார்ந்திருந்த வக்கீல் அண்ணாதுரையும் காயம் அடைந்தார். பிறகு இளங்கோவன், அண்ணாதுரை இருவரும் அரசு மருத்துவமனையிலும், பிறகு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை பெற்றனர். இதில் இளங்கோவனின் வலது காது திறனிழந்தது.
இழப்பீடு வழங்க உத்தரவு
இதனைத்தொடர்ந்து இளங்கோவன், விபத்து காப்பீடு செய்திருந்த காப்பீட்டு நிறுவனத்தின் கிளை மேலாளரிடம் மனு செய்து மருத்துவ காப்பீட்டு தொகையை அனுமதித்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அவருக்கு காப்பீடு தொகையை அந்நிறுவனம் வழங்காமல் காலம் கடத்தியது. காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளான இளங்கோவன், தனது வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் காப்பீட்டு நிறுவனத்தின் கிளை மேலாளர் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர். இதில் விபத்தினால் இளங்கோவனுக்கு ஏற்பட்ட தீக்காயத்திற்காக ரூ.3 லட்சம் இழப்பீட்டுத்தொகையும், விபத்து மருத்துவ செலவினங்களுக்காக ரூ.50 ஆயிரமும், காப்பீட்டு நிறுவனத்தின் சேவைக்குறைபாடு மற்றும் மனுதாரரின் மனஉளைச்சலுக்காக ரூ.ஒரு லட்சமும், அவரது வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும், காப்பீட்டு நிறுவனத்தின் கிளை மேலாளர் வழங்கவேண்டும் என்று நீதிமன்றத்தினர் உத்தரவிட்டனர்.