சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்


சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே சிறுத்தை தாக்கி ஆடு பலியானது. இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே சிறுத்தை தாக்கி ஆடு பலியானது. இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆடு பலி

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சில சமயங்களில் சிறுத்தைகள் கால்நடைகளையும் கடித்து கொன்று வருகிறது. இந்தநிலையில் ஸ்ரீமதுரை ஊராட்சி கலிக்குன்னு பகுதியை சேர்ந்த அப்து என்பவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் புகுந்த சிறுத்தை ஒன்று, அப்து வளர்த்து வந்த ஆட்டை கடித்துக் கொன்றது. பின்னர் அதன் உடற்பாகங்களை தின்று விட்டு அங்கிருந்து சென்றது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரன், வனவர் செல்லதுரை, வனக்காப்பாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் நாசர் அலி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பிடிக்க கோரிக்கை

அப்போது சிறுத்தை தாக்கி ஆடு இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி உள்ளனர். தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட அப்துவுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story