சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது


சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது
x

ஊட்டி அருகே சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி அருகே சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது.

சிறுமி பலி

நீலகிரி மாவட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட தேனாடுகம்பை பிரிவு அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி நிஷாந்த் என்பவரது மகள் சரிதா (வயது 4) தேயிலை தோட்டத்தில் நின்றிருந்தாள். அப்போது சிறுத்தை தாக்கியதில் சரிதா பரிதாபமாக உயிரிழந்தாள். தகவல் அறிந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதனால் அச்சம் அடைந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

தொடர்ந்து நீலகிரி வன கோட்ட அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம் உத்தரவின் பேரில் அரக்காடு பகுதியில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இதில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன. மேலும் சிறுத்தைக்கு பிடித்த இறைச்சி வைக்கப்பட்டு இருந்தது.

சிறுத்தை சிக்கியது

இந்தநிலையில் நேற்று அதிகாலை கூண்டுக்குள் இருந்து சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டது. தொடர்ந்து வனத்துறையினர் சென்று பார்த்த போது, கூண்டில் சிறுத்தை சிக்கியது தெரியவந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிறுத்தையுடன் கூண்டு ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கூண்டில் சிக்கியது 4 முதல் 6 வயது வரை உள்ள பெண் சிறுத்தை ஆகும். நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதால், முதுமலை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது என்றனர். சிறுமியை கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் 10 நாட்களில் பிடித்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.


Next Story