விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்
கறம்பக்குடி அருகே அம்பேத்கர் உருவப்படத்தை சேதப்படுத்தி கட்சி கொடியை கிழித்தவர்களை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி:
அம்பேத்கர் உருவப்படம் சேதம்
கறம்பக்குடி அருகே உள்ள புதுவலசல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் உருவப்படத்துடன் பெயர் பலகை மற்றும் கட்சி கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் அருகே அப்பகுதி இளைஞர்கள் நடத்தும் தீபம் வளர்ச்சி கழகத்தின் விளம்பர பலகையும் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அம்பேத்கர் உருவப்படத்தை சேதப்படுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை கிழித்து, கல்வி வளர்ச்சி கழக பலகையையும் உடைத்து சென்றனர். ஏற்கனவே இதே பகுதியில் 5 முறை அம்பேத்கர் படம் சேதப்படுத்தபட்டிருந்தது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் இன்று காலை கறம்பக்குடி- ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் கட்டைகளை போட்டு தடுப்புகளையும் ஏற்படுத்தினர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில் அடுத்தடுத்து அம்பேத்கர் படம் சேதப்படுத்தபட்ட நிலையில் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து வருகிற 16-ந்தேதிக்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.