ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை
பாபநாசத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாபநாசம்;
பாபநாசத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஜெய் நகரில் வசித்து வருபவர் சுந்தர் ராமன். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார்.நேற்று காலை அவர் தனது வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ, கட்டில் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.
ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை
சுந்தர்ராமன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டதை தெரிந்து கொண்ட மர்ம மனிதர்கள், சுந்தர்ராமன் வீட்டிற்கு வந்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று உள்ளனர்.பின்னர் வீட்டிற்குள் பீரோவில் வைத்திருந்த வைரத்தோடு, வைர மூக்குத்தி மற்றும் 8 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று உள்ளனர். கொள்ளை போன தங்க, வைர நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று சுந்தர்ராமன் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் விசாரணை
இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாபநாசம் போலீஸ் நிலையத்தில் சுந்தர்ராமன், புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, பாபநாசம் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சாவூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் சோழா வரவழைக்கப்பட்டது. மேலும் கொள்ளை நடந்த வீட்டுக்கு தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன் தலைமையில் தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்ைத கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.