பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள ஓரசோலை அண்ணநகரை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவரது மகன் பிரபு (வயது 23). கட்டுமான தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த சந்தியாஸ்ரீ (20) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் காதலர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்ட தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு அளித்தனர். இதையடுத்து நேற்று பிரபு, சந்தியா ஸ்ரீ இருவரும் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேகர், இருவரின் பெற்றோரையும் அழைத்துப் பேசி, காதல் ஜோடிக்கு அறிவுரை வழங்கினார். சந்தியா ஸ்ரீ தனது பெற்றோருடன் செல்ல மறுத்ததையடுத்து, திருமணம் செய்துக்கொண்ட ஜோடியை மணமகனின் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.