மதுரை-கோவை ரெயில் போத்தனூருடன் நிறுத்தம்
தண்டவாள பராமரிப்பு பணிக்காக மதுரை-கோவை ரெயில் போத்தனூருடன் நிறுத்தப்படுகிறது.
தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட சேலம் கோட்டத்தில் உள்ள போத்தனூர்-கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, மதுரையில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு பழனி வழியாக மதியம் 12.45 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்றடையும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் (வ.எண்.16722) வருகிற 16-ந் தேதி முதல் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை கோவை ரெயில் நிலையம் செல்வதற்கு பதிலாக, போத்தனூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். அதேசமயத்தில், கோவையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ரெயில் (வ.எண்.16721) வழக்கம் போல கோவை ரெயில் நிலையத்தில் இருந்து போத்தனூர், பொள்ளாச்சி, பழனி வழியாக மதுரைக்கு இயக்கப்படும்.