மதுரை மாநாடு வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாமல் தினகரன் பேசி வருகிறார்- முன்னாள் அமைச்சர் காமராஜ்
15 லட்சம் பேர் வந்ததை, 3 லட்சம் பேர் வந்ததாக, மதுரை மாநாடு வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாமல் தினகரன் பேசி வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.
15 லட்சம் பேர் வந்ததை, 3 லட்சம் பேர் வந்ததாக, மதுரை மாநாடு வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாமல் தினகரன் பேசி வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.
அ.தி.மு.க. கொண்டாட்டம்
அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிராக முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்து தஞ்சை தெற்கு மாவட்ட, மாநகர அ.தி.மு.க. சார்பில் தஞ்சை ரெயில் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளர் காந்தி, எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இனிப்புகள் வழங்கினர்
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் பாலை ரவி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சங்கர், மாவட்ட மாணவரணி செயலாளர் நாராயணிஜவகர், பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கலியமூர்த்தி சாமிவேல், முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், 51-வது வார்டு செயலாளர் மனோகர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்துமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதி முன்னாள் செயலாளர் வக்கீல் சரவணன் செய்திருந்தார்.
காமராஜ் பேட்டி
பின்னர் முன்னாள் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒருமனதாக நினைத்த போது, பலரும் இடையூறு செய்தார்கள். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் போன்றவர்கள் இந்த இயக்கத்திற்கு செய்தது மிகப்பெரிய துரோகம். எப்படியாவது கட்சிக்கு ஒற்றை தலைமை வந்துவிடக்கூடாது என எண்ணினார்கள். நீதிமன்றங்களை நாடினார்கள்.
அனைத்திலும் வெற்றி பெற்று தொண்டர்கள் பலத்தால் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆனார்.
தாங்கிக்கொள்ள முடியவில்லை
தற்போது வந்த தீர்ப்பின் மூலம் நியாயம் வென்றுள்ளது. மதுரை மாநாட்டில் 3 லட்சம் பேர் தான் கூடி இருப்பார்கள் என தினகரன் தெரிவித்தார். ஆனால் 15 லட்சம் பேர் கூடியது அனைவருக்கும் தெரியும். மதுரை எழுச்சி மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதை தாங்கிக்கொள்ள முடியாமல் தினகரன் போன்றவர்கள் பேசி வருகிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சி தமிழர் பட்டத்தை பல்வேறு சமய தலைவர்கள், பெரியவர்கள் சேர்ந்து, தமிழகத்திற்கு ஆற்றிய பணிகளுக்காக வழங்கி உள்ளனர். காவிரி நீரை பெற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எழுச்சி மாநாடு, நீதிமன்ற தீர்ப்பு போன்றவை வரும் நாடாளுமன்ற தேர்தலில், 40 தொகுதியிலும் அ.தி.மு.க. வெல்லும் என்பதற்கு அச்சாரமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.