சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் திருமண பதிவு சான்று வழங்கலாம் - மதுரை ஐகோர்ட்டு


சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் திருமண பதிவு சான்று வழங்கலாம் - மதுரை ஐகோர்ட்டு
x

சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் திருமண பதிவு சான்று வழங்கலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை

சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் திருமண பதிவு சான்று வழங்கலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காதல் திருமணம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் லெடியா என்பவரை காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் 10.6.2022 அன்று திருமணம் செய்தார். தங்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யக்கோரி, திருச்சுழி சார்-பதிவாளரிடம் இருவரும் 17.6.2022-ல் மனு அளித்தனர். ஆனால், லெடியாவுக்கு 21 வயது பூர்த்தியாகவில்லை எனக் கூறி, திருமணத்தை பதிவுசெய்ய சார்-பதிவாளர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து தங்கள் திருமணத்தை பதிவு செய்ய சார்-பதிவாளருக்கு உத்தரவிடக்கோரி சரத்குமார், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சிறப்பு திருமண சட்டத்தில், திருமணப் பதிவுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும். அதை சார்-பதிவாளர் திருமண அறிவிப்பு புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். அந்த புத்தகம் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். அப்படித்தான் 72 வயதான பெரியார் ஈ.வே.ராமசாமிக்கும், 27 வயதான மணியம்மைக்கும் நடக்க இருந்த திருமணம் தெரியவந்தது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மனைவி அவரைவிட 25 வயது மூத்தவர்.

வயது வெறும் எண்தான்

இதுபோன்ற உதாரண ஜோடிகளுக்கு வயது என்பது வெறும் எண் மட்டுமே.

இந்த வழக்கில் மனுதாரர் இந்து. அவர் திருமணம் செய்த பெண் கிறிஸ்தவர். இந்து திருமணச் சட்டத்தில் இரு இந்துக்கள் சுயமரியாதை அல்லது சீர்திருத்தத் திருமணம்செய்து கொண்டால் மட்டுமே, அந்த சட்டத்தின்கீழ் திருமணத்தைப் பதிவு செய்ய முடியும்.

இந்திய கிறிஸ்தவர்கள் திருமணச் சட்டத்தில் மணமக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் எனச் சொல்லப்படவில்லை. ஆனால் அந்த திருமணம் கிறிஸ்தவ தேவாலயத்தில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மனுதாரரின் திருமணம் அவ்வாறு நடைபெறவில்லை. இதனால் இந்தச் சட்டத்தின் கீழும் அவரது திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது.

சட்டத்தை பின்பற்றினால்....

சிறப்பு திருமணச் சட்டத்தில் திருமணப் பதிவுக்கு 30 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும். இதுதான் சிறப்பு திருமணச் சட்டப்பதிவின் முதல்படி. மனுதாரர் திருமணம் முடிந்த பிறகுதான் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதனால் சிறப்பு திருமணச் சட்டத்தின் சலுகையையும் மனுதாரர் பெற முடியாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், திருமணம் என்பது மிகவும் அடிப்படையானது. அதனால்தான், திருவள்ளுவர் தனி அதிகாரமே எழுதியுள்ளார். மனுதாரரும், அவரது மனைவியும் எந்த சட்டத்தின்கீழும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்காக அவர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் நிறுத்த முடியாது.

மனுதாரர்கள் சட்டப்பிரிவு 5-ன்கீழ் நோட்டீஸ் அளித்துள்ளனர். அந்த நோட்டீஸ் 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். மனுதாரர் சட்டத்தின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அவர்கள் சட்டத்தை பின்பற்றும் போது லெடியாவுக்கு 21 வயது பூர்த்தியாகவில்லை என்று சொல்லி மனுதாரருக்கு திருமணப் பதிவு சான்றிதழ் வழங்க சார்- பதிவாளர் மறுக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story