பழ வியாபாரியிடம் சகஜமாக பழகும் மலபார் அணில்
குன்னூர் சிம்ஸ் பூங்கா முன்பு பழக்கடைக்கு வரும் மலபார் அணில், வியாபாரியிடம் சகஜமாக பழகி பழங்களை வாங்கி தின்று பசியாறுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
குன்னூர்
குன்னூர் சிம்ஸ் பூங்கா முன்பு பழக்கடைக்கு வரும் மலபார் அணில், வியாபாரியிடம் சகஜமாக பழகி பழங்களை வாங்கி தின்று பசியாறுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மலபார் அணில்
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதிகள் உள்ளன. இங்கு வனவிலங்குகள், அரிய வகை பறவைகள், உயிரினங்கள் உள்ளன. நீலகிரி வனப்பகுதிகளில் உள்ள மரங்களில் மலபார் அணில்கள் உள்ளன. இவை உயரமான மரங்களில் வாழும் பெரிய அணிலாகும். இந்த அணில்களில் வனப்பகுதிகளில் உள்ள மரங்களில் விளையும் பழங்களை உணவாக உட்கொள்கிறது.
நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி, வனவிலங்குகள், அரிய வகை பறவைகள், விலங்குகளையும் கண்டு ரசித்து வருகின்றனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர்கள் மட்டுமின்றி, நூற்றாண்டு பழமையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் அரிய வகை மலபார் அணில்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் ஒரு அணில் உணவு ேதடி பூங்கா அருகில் உள்ள பழக்கடைக்கு தினமும் வந்து செல்கிறது.
சுற்றுலா பயணிகள்
அந்த கடையை நடத்தி வரும் நசீமா என்ற பெண், மலபார் அணிலுக்கு பழங்களை கொடுத்து வருகிறார். அந்த அணில் அவரிடம் சகஜமாக பழகி வருவதோடு, பழங்களை வாங்கி தின்று பசியாறி வருகிறது. பின்னர் மீண்டும் பூங்காவுக்குள் சென்று விடுகிறது. கடந்த 2 நாட்கள் பூங்காவில் 63-வது பழக்கண்காட்சி நடந்தது. இதனை வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கண்காட்சி நிறைவடைந்த பின்னரும் பழ அலங்காரங்களை பார்வையிட வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பூங்கா முன்பு உள்ள பழக்கடையில் நசீமாவிடம் பழம் வாங்கி உண்ணும் மலபார் அணிலை கண்டு ரசித்தனர். நேற்று கடையில் பழம் தின்று கொண்டிருந்த அணிலை செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். அதற்கு ஏற்றவாறு மலபார் அணில் போஸ் கொடுத்தது சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. மனிதர்களை கண்டவுடன் ஓடும் இந்த அணில்கள், பழக்கடையில் பெண்ணிடம் பழங்களை வாங்கி உண்டதை சுற்றுலா பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டனர்.
செல்லப்பிராணி போல்...
இதுகுறித்து நசீமா கூறும்போது, பழக்கடைக்கு தினமும் ஒரு முறை மலபார் அணில் வருகிறது. அதற்கு சீசனில் விளையும் கொய்யா, பேரிக்காய், பிளம்ஸ் போன்ற பழங்களை கொடுப்பேன். அதை வாங்கி கடை மீது அமர்ந்து பசியாறும். அந்த அணில் செல்லப்பிராணி போல் கை மீது அமர்ந்து இருக்கும். மலபார் அணில் மனிதர்களிடம் பழகி விட்டதால், சுற்றுலா பயணிகளை பார்த்தால் ஓடாமல் நின்று பழங்களை உண்கிறது என்றார்.