வீடுகளில் பூட்டை உடைத்து திருடியவர் கைது

பரமத்திவேலூர் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பரமத்திவேலூர்:-
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போலீசார் திருட்டு வழக்கில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுபள்ளி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துராஜ் (வயது 28) என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், முத்துராஜ், பரமத்திவேலூர் சக்ரா நகரில் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் மேல் விசாரணை நடத்தினர். அப்போது, சக்ராநகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையன் உருவமும், ஒட்டன்சத்திரம் போலீசாரிடம் சிக்கிய முத்துராஜ் உருவமும் ஒரேபோல் இருந்தது. உடனே பரமத்திவேலூர் போலீசார், ஒட்டன்சத்திரம் போலீசார் உதவியுடன் முத்துராஜிடம் இருந்து 15 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர். அவரை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் உரிய நபர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தெரிவித்தார்.