சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

பாலியல் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 46). இவர் கடந்த ஆண்டு (2022) மார்ச் மாதம் 27-ந் தேதி 7-ம் வகுப்பு மாணவியான 12 வயது சிறுமி தனியாக நடந்து சென்ற போது பின்தொடர்ந்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார்.

மேலும் அதனை வெளியில் சொல்லாமல் இருக்க மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து முத்துராமலிங்கத்தை கைது செய்தனர்.

5 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். முத்துராமலிங்கத்திற்கு சிறுமியை வழிமறித்த பிரிவில் 1 மாதம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், தகாத வார்த்தையால் திட்டியதற்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், போக்சோ பிரிவில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரமும் அபராதம் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் 5 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிப்பார்.

இந்த வழக்கில் அபராத தொகையான ரூ.75 ஆயிரத்து 550 மற்றும் அரசு சார்பில் ரூ.25 ஆயிரமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க நீதிபதி சத்யா உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட முத்துராமலிங்கத்தை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


Next Story