பூட்டிய வீடுகளில் 5 இடங்களில் கைவரிசை காட்டியவர் கைது


பூட்டிய வீடுகளில் 5 இடங்களில் கைவரிசை காட்டியவர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி பகுதியில் பூட்டிய வீடுகளில் 5 இடங்களில் கைவரிசை காட்டியவரை போலீசார் கைது செய்தனர். இவர் திருடிய பணத்தில் துணை நடிகைகளிடம் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டது அம்பலமானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி பகுதியில் பூட்டிய வீடுகளில் 5 இடங்களில் கைவரிசை காட்டியவரை போலீசார் கைது செய்தனர். இவர் திருடிய பணத்தில் துணை நடிகைகளிடம் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டது அம்பலமானது.

தொடர் திருட்டு

ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் பூட்டிய வீடுகளை குறி வைத்து பணம், நகைகள் என தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். இதேபோல தோவாளை, மாதவலாயம் பகுதியிலும் கொள்ளை சம்பவம் அதிகரித்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஆசாமியை தீவிரமாக தேடி வந்தனர்.

ஒருவர் சிக்கினார்

மேலும் தனிப்படை போலீசாரும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் அம்பாசமுத்திரம் போலீஸ் நிலைய பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் நாமக்கல்லில் உள்ள ஒரு விடுதியில் வைத்து ஒருவரை கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே முகிலன் குடியிருப்பை சேர்ந்த சுடலைபழம் (வயது 48) என்பதும், குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

காவலில் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சுடலைபழத்தை குமரி மாவட்டம் அழைத்து வந்து நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் 3 வீடுகள், தோவாளை கமல்நகர், மாதவலாயம் ஆகிய 5 இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.

உல்லாச வாழ்க்கை

சுடலைபழத்துக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட தெரியாது. இதனால் எங்கு திருடச் சென்றாலும் அவர் பஸ்சில் செல்வது வழக்கமாம். அந்த ஊருக்கு சென்றதும் பகலில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் பதுங்கி இருந்து அதிகாலையில் கைவரிசை காட்டி வந்துள்ளார்.

அவ்வாறு கைவரிசை காட்டியதும் கையில் கிடைத்த நகை, பணத்துடன் சென்னை, ஐதராபாத், கேரளாவுக்கு சென்று அங்கு உயர்தர விடுதிகளில் தங்கி துணை நடிகைகளிடம் உல்லாசமாக இருந்தது விசாரணையில் அம்பலமானது. பின்னர் காவல் விசாரணை முடிந்ததும் நேற்று மாலையில் பூதப்பாண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story