ஆட்டோ டிரைவரை மிரட்டியவர் கைது
உடன்குடியில் ஆட்டோ டிரைவரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி தேரியூர் அய்யாநகரைச் சேர்ந்த மகாராஜன் மகன் முத்துக்குமார் (வயது 22). அதே பகுதியைச் சேர்ந்த சிவன் மகன் கோவிந்தன் (21). இருவரும் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவிந்தன் அடிக்கடி முத்துக்குமாரின் ஆட்டோ மீது மோதுவது போல் வந்துள்ளார். இதுசம்பந்தமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பண்டாரஞ்செட்டிவிளை செல்லும் சாலையில் முத்துக்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோவிந்தன் அவதூறாக பேசி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வாளைக்காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி கோவிந்தனை கைது செய்தார்.