புதர்கள் நிறைந்த மஞ்சூர்-கோவை சாலை


புதர்கள் நிறைந்த மஞ்சூர்-கோவை சாலை
x
தினத்தந்தி 30 Aug 2022 8:42 PM IST (Updated: 31 Aug 2022 3:00 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சூர்-கோவை சாலையில் புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

மஞ்சூர்-கோவை சாலையில் புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மஞ்சூர்-கோவை சாலை

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு செல்ல குன்னூர், பர்லியார் வழியாகவும், கோத்தகிரி வழியாகவும், மஞ்சூர், கெத்தை வழியாகவும் என 3 வழித்தடங்கள் உள்ளது. பருவமழை காலங்களில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஆங்காங்கே பாறைகள் உருண்டு விழுவது, மரங்கள் முறிந்து விழுவது போன்ற பேரிடர்கள் ஏற்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அந்த நேரங்களில் கோத்தகிரி வழியாக போக்குவரத்து திருப்பி விடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதியடைந்து வந்தனர். மேலும் பலத்த மழை பெய்யும் போது, கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் கோவைக்கு செல்ல 3-வது மாற்றுப்பாதை இன்றியமையாதது.

விபத்து அபாயம்

இதனால் மஞ்சூர்-கோவை சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2 மாதமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், சாலையில் கற்கள் விழுந்து கிடக்கின்றன. மேலும் சாலையோரம் இருந்த செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது. குறிப்பாக வளைவுகள் இருக்கும் இடத்தில், புதர்கள் நிறைந்து இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு தினமும் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகிறது. 43 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட 55 கிலோ மீட்டர் தூர சாலை 7 மீட்டராக அகலப்படுத்தபட்டதால், கோவைக்கு 2½ மணி நேரத்தில் செல்ல முடிகிறது.

நடவடிக்கை

இதற்கிடையே தொடர் மழையின் காரணமாக கற்கள் உருண்டு சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்து கிடக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும் போது, விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது.

மேலும் சாலையின் இருபுறங்களிலும் செடி கொடிகள் வளர்ந்து புதர்கள் ஆக்கிரமித்து உள்ளன. எனவே, சாலையில் உள்ள கற்களை அகற்றவும், புதர்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story