வீரமரணம் அடைந்த வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம்


காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அவரது சொந்த ஊரில், ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. உடலுக்கு அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர்.

மதுரை

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அவரது சொந்த ஊரில், ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. உடலுக்கு அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர்.

மதுரை ராணுவ வீரர் மரணம்

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது கடந்த 12-ந் தேதி அதிகாலை நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 25) உள்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதில் லட்சுமணனின் உடல் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் அவரது சொந்த ஊரான புதுப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனிஷ்சேகர் ஆகியோர் ராணுவ வீரரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை ரூ.20 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் மகேந்திரன், பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கணபதி மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு கிராமத்தின் அருகே உள்ள நிலத்திற்கு அடக்கம் செய்ய கொண்டுவரப்பட்டது.

அங்கு. உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் லட்சுமணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

லட்சுமணன் உடலில் போர்த்திய தேசிய கொடியை ராணுவ வீரர்கள் மரியாதையுடன் எடுத்துவந்து, லட்சுமணன் தந்தை தர்மராஜ், தாய் ஆண்டாள், சகோதரர் ராமரிடம் கொடுத்தனர். இதனை பெற்றுக்கொண்ட அவர்கள் கதறி அழுதனர்.


Next Story