18 வயது சிறுமியுடன் காதலால் பயங்கரம்: கொத்தனார் கழுத்தை அறுத்து கொலை-சிறுவன் உள்பட 2 பேர் கைது
18 வயது சிறுமியுடனான காதல் விவகாரத்தில் கொத்தனாரை கழுத்தை அறுத்து கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி:
கழுத்தை அறுத்து...
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள துக்கியாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பராயன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 23). கொத்தனார். மேலும், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் பூக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை துக்கியாம்பாளையம் வடக்கு காடு பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து கிடந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சக்திவேலின் தாய் அஞ்சலம் நேற்று காலை வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சக்திவேலை கத்தியால் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற பயங்கரம் நடந்திருப்பது தெரிந்தது.
சிறுமியுடன் காதல்
கொத்தனாரான சக்திவேலும், 18 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் சக்திவேலை எச்சரித்து, சிறுமியுடனான காதலை கைவிடும்படி கூறி வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சக்திவேல் வேலை முடிந்து, வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை சிறுமியின் அண்ணன் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் வழிமறுத்துள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், சக்திவேலை அவர்கள் 3 பேரும் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். மேலும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் விபத்து நடந்தது போல் மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
2 பேர் கைது
இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் அண்ணன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல், நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சிறுமியுடனான காதலில் கொத்தனார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.