மனைவியை வீட்டை விட்டு துரத்திய கொத்தனார்


மனைவியை வீட்டை விட்டு துரத்திய கொத்தனார்
x

2 பெண் குழந்தை களுடன் வீட்டை விட்டு துரத்தியதாக கொத்தனார் மீது மனைவி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

கடலூர்

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் பட்டா தொடர்பாக 143 மனுக்கள், முதியோர் உதவித்தொகை கேட்டு 83 மனுக்கள், வேலைவாய்ப்பு தொடர்பாக 48 மனுக்கள், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கேட்டு 55 மனுக்கள், காவல்துறை தொடர்பாக 36 மனுக்கள், இதர மனுக்கள் 39 என மொத்தம் 404 மனுக்கள் பெறப்பட்டது.இந்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, ஒரு பெண் தனது 2 மகள்களுடன் கூடுதல் கலெக்டரிடம் மனு அளித்து விட்டு கலெக்டர் அலுவலக வாசலில் கண்ணீர் மல்க அமர்ந்து இருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்த போது, அவர் சேத்தியாத்தோப்பு அருகே பெரவரப்பூரை சேர்ந்த தமிழரசி (வயது 25) என்றும், இவரும் காட்டுமன்னார்கோவில் அருகே குருவாடியை சேர்ந்த கொத்தனார் ராஜீவ்காந்தியும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

துரத்தி விட்டனர்

தற்போது அவர்களுக்கு 3½ வயதில் யுவஸ்ரீ, 4 மாத குழந்தை தனுஸ்ரீ ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து அவர் கணவர் ஒப்புதலுடன் குடும்ப அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிகிறது.

ஆனால் கணவர் எனக்கு தெரியாமல் எப்படி குடும்ப அறுவை சிகிச்சை செய்தாய் என்று அவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரும் தமிழரசியை வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும், இதனால் தன்னுடைய கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று மனு அளிப்பதற்காக வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி விட்டனர்.

இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story