கொத்தனார் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை
கொத்தனார் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திருவெறும்பூர்:
கொத்தனார்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 37). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்துமதி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன் பிரதாப் (7), அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் ஜெயபாலுக்கும், அவருடைய வீட்டின் அருகே உள்ள சுந்தர் என்பவருக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் வடிவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஜெயபாலின் காலில் சுந்தர் அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்த வழக்கு திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
வெட்டிக்கொலை
இந்நிலையில் நேற்று காலை ஜெயபாலுக்கும், சுந்தர் தரப்பினருக்கும் இடையே குடிபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஜெயபால் கறி வெட்டும் கத்தியுடன் சுந்தர்(37) தரப்பினரை வெட்ட வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சுந்தர் தரப்பினர் ஜெயபாலை வெட்டுவதற்கு ஓட ஓட விரட்டி உள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜெயபால், கொங்கு நகர் பகுதிக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு அவரை துரத்திக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த சுந்தர், அவரது தம்பி மாசி(24), தளபதி(37), அவரது தம்பி ரகு மற்றும் ஹரி (21) ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக ஜெயபாலை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
போலீசார் விசாரணை
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகன் மற்றும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அங்கு மோப்ப நாய் லில்லி வரவழைக்கப்பட்டது. ஜெயபால் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்ற நாய் பின்னர் நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதையடுத்து ஜெயபாலின் உடலை கைப்பற்றிய திருவெறும்பூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சுந்தர் உள்ளிட்ட 5 பேரையும் தேடி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஜெயபாலை 5 பேர் கொண்ட கும்பல் விரட்டி சென்று வெட்டியது பதிவாகியுள்ளது. அதனை திருவெறும்பூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. திருவெறும்பூர் பகுதியில் கொத்தனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.