கோர்ட்டு வளாகத்தில் செல்போனில் கைதி பேசிய விவகாரம்: 2 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம் - மதுரை போலீஸ் கமிஷனர் அதிரடி


கோர்ட்டு வளாகத்தில் செல்போனில் கைதி பேசிய விவகாரம்: 2 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம் - மதுரை போலீஸ் கமிஷனர் அதிரடி
x

மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் கைதி செல்போனில் பேசிய விவகாரத்தில், கைதிக்கு உடந்தையாக இருந்த 2 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீ்க்கம் செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் கைதி செல்போனில் பேசிய விவகாரத்தில், கைதிக்கு உடந்தையாக இருந்த 2 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீ்க்கம் செய்யப்பட்டனர்.

பல லட்சம் ரூபாய் மோசடி

மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் கணேசபாண்டியன். இவருடைய மகன் ஸ்ரீபுகழ்இந்திரா(வயது 41). இவர் தனக்கு சொந்தமான ஒரு வீட்டை ஒத்திக்கு விடுவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்த சிலர் அவரை அணுகினர். அவ்வாறு அணுகிய அனைவரிடமும் ஒரே வீட்டை காண்பித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள், தகராறு செய்தும் பணத்தை திருப்பி கொடுக்காததால், போலீசில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீபுகழ் இந்திராவை கைது செய்தனர். இந்தநிலையில், இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

செல்போனில் பேசினார்

இதற்காக ஸ்ரீபுகழ் இந்திராவை போலீசார் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்தனர். அப்போது கோர்ட்டு வளாகத்தில் நின்றபடி ஸ்ரீபுகழ் இந்திரா, உறவினர்கள் சிலரிடம் செல்போன் மூலம் பேசி உள்ளார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணையும் நடத்தப்பட்டது. அப்போது கைதியான ஸ்ரீபுகழ் இந்திரா, நண்பர் ஒருவரின் செல்போனை வாங்கி பேசியது தெரியவந்தது.

2 பேர் பணியிடை நீக்கம்

இந்த விவகாரத்தில் மாநகர போலீஸ் ஏட்டுகள் சுரேஷ் கார்த்திகேயன், அய்யனன் ஆகியோர் ஸ்ரீபுகழ் இந்திரா செல்போனில் பேசுவதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.


Next Story