கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற வியாபாரிஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற வியாபாரிஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

ஈரோடு

கந்துவட்டி கொடுமை காரணமாக, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோலை ஊற்றி வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஈரோடு மாவட்டம் அறச்சலூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த வியாபாரியான குமார் (வயது 36) என்பவர் மனு கொடுப்பதற்காக, தனது மனைவி மங்கம்மாள் மற்றும் மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது நுழைவு வாயில் பகுதியில் நின்று கொண்டு இருந்த குமார் திடீரென பாட்டிலில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்து உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருஷ்டி பொம்மை வியாபாரி

இதுகுறித்து குமார் கூறும்போது, 'நான் திருஷ்டி பொம்மை வியாபாரம் செய்து வருகிறேன். நான் வசித்து வரும் பகுதியை சேர்ந்த 4 பேரிடம் குடும்ப செலவுக்காக மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி இருந்தேன். வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் வட்டி கட்டி வந்தேன்.

நான் வாங்கிய பணத்தை விட வட்டி அதிக அளவில் கட்டி வந்ததால் என்னால் சமாளிக்க முடியவில்லை. இதனால் நான் எனது வீட்டையும் விற்று பணத்தை கொடுத்தேன். அப்போதும் அவர்கள் 4 பேரும் என்னிடம் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். நாளுக்கு நாள் அவர்கள் கந்து வட்டி கேட்டு தொந்தரவு கொடுத்தனர். இதன் காரணமாக என்னால் வியாபாரமும் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக தான் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன்' என்றார். மேலும் குமாரை போலீசார் சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story