முயல் வேட்டைக்கு சென்ற வியாபாரி மின்சாரம் பாய்ந்து பலி


முயல் வேட்டைக்கு சென்ற வியாபாரி மின்சாரம் பாய்ந்து பலி
x
தினத்தந்தி 4 Sept 2023 1:00 AM IST (Updated: 4 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கன்னிவாடி அருகே முயல் வேட்டைக்கு சென்ற வியாபாரி மின்சாரம் பாய்ந்து பலியானார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தேங்காய் வியாபாரி

திண்டு்க்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கொட்டாரப்பட்டியை சேர்ந்த சக்திவேல் மகன் ஹரிகரன் (வயது 20). தேங்காய் வியாபாரி. அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர்கள் சவுந்தரபாண்டி (22), மணிகண்டன் (22).

நேற்று முன்தினம் இரவு 3 பேரும் முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது முத்துராம்பட்டியில் உள்ள தனியார் தோட்டம் அருகே முயல் ஒன்று ஓடுவதை பார்த்தனர். உடனே ஹரிகரன் அந்த முயலை பிடிப்பதற்கு விரட்டி சென்றார்.

மின்சாரம் பாய்ந்து பலி

அப்போது மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டிருந்த தோட்ட பகுதிக்கு சென்றார். அந்த தோட்டத்துக்குள் காட்டுப்பன்றிகள் வராமல் இருப்பதற்கு இரும்பு கம்பியை வைத்து அதில் மின்சாரம் பாய்ச்சி இருந்ததாக தெரிகிறது.

முயலை பிடிக்கும் ஆர்வத்தில் இருந்த ஹரிகரன் இரும்பு கம்பியை மிதித்து விட்டார். அதில் இருந்த மின்சாரம் அவர் மீது பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணை

இதை பார்த்த சவுந்தரபாண்டி, மணிகண்டன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஹரிகரனின் பெற்றோருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் கன்னிவாடி ேபாலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன், கன்னிவாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஹரிகரனின் பெற்றோரும் அங்கு வந்து, அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.

பின்னர் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தோட்ட குத்தகைதாரர் காளிமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சாலை மறியல்

இதற்கிடையே ஹரிகரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். பின்னர் மருத்துவமனை முன்பு திருச்சி சாலையில் அமர்ந்து திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்ததும் விரைந்து வந்த வடக்கு போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனியார் தோட்டத்தில் இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ச்சி இருந்த தோட்ட குத்தகைதாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் உறவினர்கள் வலியுறுத்தினர். அதையடுத்து பேசிய போலீசார் ஹரிகரன் இறந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் மின்சாரம் பாய்ந்து இறந்தது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதில் சமாதானமடைந்த ஹரிகரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story