பால் வியாபாரி உடலை 4 மாதங்களுக்கு பின்னர் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
பால் வியாபாரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரின் அண்ணன் அளித்த புகாரின் பேரில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பால் வியாபாரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரின் அண்ணன் அளித்த புகாரின் பேரில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பால்வியாபாரி சாவு
அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் ஊராட்சி மலைசந்து கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40), பால்வியாபாரி. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சில நாட்களில் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதனால் தனிமையில் வசித்து வந்த நடராஜன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்களுக்கு பின்னர் நடராஜன் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதையடுத்து உடலை உறவினர்கள் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
உடல் தோண்டி எடுப்பு
இந்த நிலையில் நடராஜனின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவருடைய அண்ணன் சேட்டு அரியூர் போலீசில் கடந்த மாதம் புகார் அளித்தார்.
அதன்பேரில் 4 மாதங்களுக்கு பின்னர் இன்று அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலையில் நடராஜனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே நடராஜன் உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரிய வரும். ஓரிருநாளில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துவிடும் என்று போலீசார் தெரிவித்தனர்.