சுத்தியலால் அடித்து தந்தையின் மண்டையை உடைத்த மில்தொழிலாளி
வடமதுரை மகளிர் போலீஸ் நிலையம் முன்பு, சுத்தியலால் அடித்து தந்தையின் மண்டையை மில்தொழிலாளி உடைத்தார்.
வடமதுரையை அடுத்த சிங்காரக்கோட்டை அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). விவசாயி. அவருடைய மகன் சரவணன் (36). இவர், தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். சரவணனுக்கு, பிரியா (31) என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இந்தநிலையில் சரவணன், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு கோவையில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெருமாளும், பிரியாவும் இதுகுறித்து சரவணனிடம் கேட்டனர். இதனால் சரவணன் அவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தந்தையின் வீட்டுக்கு வந்த சரவணன் அவரிடம் தகராறு செய்தார். இதனையடுத்து பெருமாளும், பிரியாவும் சரவணன் மீது புகார் கொடுக்க வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன் சுத்தியலுடன் அங்கு வந்தார். போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த பெருமாளின் தலையில் அவர் சுத்தியால் அடித்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதில் பெருமாளின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனைக்கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். அங்கு பெருமாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.