கூடலூர் அருகே மலைப்பாதையில் கவிழ்ந்த மினி வேன்
கூடலூர் அருகே மலைப்பாதையில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் முத்துகணேசன் (வயது 32). மினி வேன் டிரைவர். இவர் நேற்று காலை மினி வேனில் மீன்களை ஏற்றிக்கொண்டு, நாகப்பட்டினத்தில் இருந்து கேரளா மாநிலம் தொடுபுழா நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே ஊரை சேர்ந்த ராஜேஷ் (37) என்பவர் கிளீனராக வந்தார்.
இந்தநிலையில் அவர்களது மினி வேன், தேனி மாவட்டம் கூடலூர் அருகே குமுளி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. குமுளியை அடுத்த மாதாகோவில் வளைவு பகுதியில் வந்தபோது, திடீரென்று மினி வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், மினி வேனில் வந்த முத்துகணேசன் லேசான காயத்துடனும், ராஜேஷ் காயமின்றியும் உயிர் தப்பினர்.
மினி வேன் கவிழ்ந்ததால் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மினி வேனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதன்பிறகு போக்குவரத்து தொடங்கியது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.