இலவச மின்சாரம் வழங்க 50 ஆயிரம் விவசாயிகளை தேர்வு செய்யும்பணி மும்முரம் அமைச்சர் தகவல்
இலவச மின்சார இணைப்பு வழங்க 50 ஆயிரம் விவசாயிகளை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை,
சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் மின்சார வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு உத்தரவுகளை பிறப்பித்தார். இதில் வாரியத்தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன் உள்பட உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறப்பு பராமரிப்பு பணி
கடந்த ஒரு ஆண்டில் 13 லட்சத்து 32 ஆயிரத்து 790 பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தற்போது சிறப்பு பராமரிப்பு பணிகளின் அடிப்படையில் 1,34,262 இடங்களில் மரக்கிளைகள் அகற்றுவது, 20 ஆயிரத்து 72 மின் கம்பங்கள் அகற்றுவது உள்பட 3 லட்சத்து 37 ஆயிரத்து 558 பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது. ஒரு மாதத்தில் இந்தப்பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சீரான மின்வினியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு
கடந்த ஆண்டு சென்னையில் மின்நுகர்வு அதிகரித்து உள்ளதால் கட்டமைப்பும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மின்சார வாரியத்தில் ஒரே ஆண்டில் 3 புதிய மண்டலங்கள் அதாவது, தஞ்சை, திருவண்ணாமலை, கரூர் 3 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்து உள்ளன. மின்னகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
நடப்பு ஆண்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு கொடுப்பதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சிலருக்கு ஆவணங்கள் சரிவர சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்படுவதால் நடப்பாண்டு 52 ஆயிரம் பயனாளிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர். 50 ஆயிரம் பேருக்கு மின்வினியோகம் வழங்கப்பட்டு, மீதம் உள்ளவர்களுக்கு வரும் ஆண்டுகளில் வழங்கப்படும்.
கடல் காற்றாலை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஸ்காட்லாந்து நாட்டுக்கு சென்று பார்வையிட்டு வர உள்ளோம். சூரிய சக்தியிலும், காற்றாலைகளும் நாட்டிலேயே அடுத்த 2 ஆண்டுகளில் முதல் இடத்தை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.