வெள்ள பாதிப்புகளை அமைச்சர் பார்த்தார்
கொள்ளிடம் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் பார்த்தார
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளன. அங்குள்ளவர்கள் தமிழக அரசின் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தண்ணீரால் சூழப்பட்டுள்ள கிராமங்களையும், அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை பலப்படுத்தப்பட்டுள்ள பகுதியையும் அமைச்சர் மெய்யநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்ளை வழங்கினார்.
பேட்டி
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக மேட்டூரிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும். நாதல்படுகை, வெள்ளமணல், முதலைமேடுதிட்டு மக்களின் நலன்கருதி புயல் பாதுகாப்பு மையம் அமைப்பது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ரூ.3 கோடியில் புயல் பாதுகாப்பு மையம்
அவரது உத்தரவின்பேரில், நாதல்படுகை கிராமத்தில் ரூ.3 கோடியில் புயல் பாதுகாப்பு மையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு கிராமத்தில் உள்ள சிலரை கரைக்கு அழைத்து வர படகு வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர்
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், ஆர்.டி.ஓ. அர்ச்சனா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, ஒன்றிய செயலாளர்கள் செல்லசேதுரவிக்குமார், மலர்விழிதிருமாவளவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.