பூக்குழியில் விரிக்கப்பட்ட சேலை தீப்பற்றி வானில் பறந்த அதிசயம்
திண்டுக்கல் அருகே பூக்குழியில் விரிக்கப்பட்ட மஞ்சள் நிற சேலை தீப்பற்றி வானில் பறந்த அதிசயத்தை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
மண்டல பூஜை
திண்டுக்கல் அருகே குட்டியப்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த ஸ்ரீஹரிஹரசுதன் அய்யப்ப பக்தர்கள் குழுவினர், ஆண்டுதோறும் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி மண்டல பூஜை மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மதியம் 1.30 மணிக்கு ஸ்ரீஹரிஹரசுதன் மணிமண்டபத்தில் எழுந்தருளிய அய்யப்ப சாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது.
பக்தர்கள் ஊர்வலம்
அதன்பின்னர் மாலை 5 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்காக சாலை சந்தன கருப்பணசாமி கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டு, மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக மகா காளியம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு மகா காளியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியை சுற்றிலும் பூக்களை வைத்திருந்தனர். மேலும் எங்க கருப்பணசாமி எனும் பக்தி பாடல் ஒலித்து கொண்டிருக்க, காளி மற்றும் கருப்பணசாமி வேடம் அணிந்தவர்கள் ஆக்ரோஷமாக ஆடி கொண்டிருந்தனர்.
தீப்பற்றி பறந்த சேலை
அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்த மஞ்சள் நிற சேலையை அய்யப்ப பக்தர்கள் எடுத்து வந்தனர். பின்னர் தகதகவென காணப்பட்ட பூக்குழியில் அந்த மஞ்சள் சேலையை விரித்தனர்.
அடுத்த நொடியே மஞ்சள் சேலை தீப்பிடித்து எரிந்தது. அவ்வாறு தீப்பிடித்து எரிந்த சேலை மேலே எழும்பி வானத்தில் பறந்து சென்றது. அது வானில் நெருப்பு பிழம்பு பறப்பது போன்று இருந்தது. இதனை அய்யப்ப பக்தர்கள் உள்பட ஏராளமான பொதுமக்களும் அதிசயத்துடன் பார்த்தனர்.
மேலும் காணிக்கையாக செலுத்திய மஞ்சள் சேலையை மாரியம்மன் ஏற்று கொண்டதாக பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். பூக்குழியில் போர்த்திய மஞ்சள் சேலை தீப்பற்றி வானில் பறந்த சம்பவம் அனைவரையும் பரவசமடைய செய்ததது. இதைத்தொடர்ந்து பூக்குழி கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.