ராகுல்காந்தி பிரதமராக வேண்டி பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்ற எம்.எல்.ஏ.
ராகுல்காந்தி பிரதமராக வேண்டி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்றார்.
இட்டமொழி:
ராகுல்காந்தி பிரதமராக வேண்டி, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன், திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் மலையடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''பிரசித்தி பெற்ற திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். ராகுல்காந்தி பிரதமராக வேண்டி நானும் பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்தேன். கோவிலுக்கு செல்லும் வழியில் கழிவறை, குடிநீர் வசதி செய்து தரவும், மலையடிவாரத்தில் இருந்து கோவில் வரை மூன்று இடங்களில் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்தார்கள். இதுகுறித்து அரசிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பேன்'' என்றார். தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை மற்றும் பலர் உடன் சென்றனர்.