அரசு கல்லூரி மாணவர்களை சரமாரியாக தாக்கிய கும்பல்
சுரண்டை பஸ் நிலையத்தில், அரசு கல்லூரி மாணவர்களை ஒரு கும்பல் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சுரண்டை:
சுரண்டை பஸ் நிலையத்தில், அரசு கல்லூரி மாணவர்களை ஒரு கும்பல் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பல் தாக்குதல்
தென்காசி மாவட்டம் சுரண்டை பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். கல்லூரி நேரம் முடிந்த பின்னர் பஸ்சுக்காக அந்த மாணவர்கள் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அந்த மாணவர்களை தாக்கியது.
மாணவர்களை சரமாரியாக அடித்து உதைத்த அந்த கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணை
இதைத்தொடர்ந்து, கல்லூரி மாணவர்களை கும்பல் தாக்குவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சுரண்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சுதந்திரா தேவி விசாரணை நடத்தி வருகிறார்.
பஸ்நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 5 பேர் கல்லூரி மாணவர்களிடம் கைகலப்பில் ஈடுபட்டு தாக்கிய காட்சி பதிவாகி இருந்தது. எதற்காக கல்லூரி மாணவர்களை தாக்கினார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த தாக்குதல் ெதாடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.