அட்டகாசம் செய்த குரங்கு கூண்டில் சிக்கியது
தட்டார்மடம் அருகே அட்டகாசம் செய்த குரங்கு கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள மேலநடுவக்குறிச்சி பகுதியில் கடந்த ஒரு மாதமாக குரங்கு ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தியும், வீட்டில் புகுந்து உணவு பொருள்களை சூறையாடியும், வாழை தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்து வந்தது. இது குறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் கிராம மக்கள், குரங்கை தாங்களாகவே கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கூண்டை வைத்தனர். அதில் 2 வாழைப்பழத்தையும் வைத்திருந்தனர். ஆனாலும், குரங்கு 2 நாட்களாக அந்த கூண்டுக்குள் செல்லாமல் பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் வாழைப்பழத்தை எடுக்க சென்ற குரங்கு கூண்டுக்குள் சிக்கி கொண்டது. இதுகுறித்து கிராம மக்கள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து வனத்துறையினர் வந்து குரங்கை மீட்டு சென்றனர். குரங்கை சித்ரவதை செய்யாமல் கூண்டு வைத்த பிடித்து கொடுத்ததற்காக கிராம மக்களை வனத்துறையினர் பாராட்டினர்.