கொண்டலாம்பட்டி அருகே மொபட்டுகள் மோதி தீப்பிடித்தது; தீயில் கருகிய இளம்பெண் பலி
கொண்டலாம்பட்டி அருகே மொபட்டுகள் மோதி ஒரு மொபட் தீப்பிடித்ததில் இளம்பெண் ஒருவர் தீயில் கருகி இறந்தார்.
கொண்டலாம்பட்டி,
மொபட்டுகள் மோதல்
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நல்ராயன்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மகள்கள் கவி ரஞ்சனி (வயது 19), ஹேமலதா (17). இவர்கள் இருவரும் கடந்த 6-ந் தேதி அன்று வீட்டில் இருந்து சீரகாப்பாடியில் உள்ள அவர்களது பாட்டி வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து இருவரும் வீட்டுக்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மொபட் கரிமேடு திட்டு பகுதியில் வந்த போது, அந்த வழியாக வீரபாண்டி அருகே உள்ள பாலம் பட்டியை சேர்ந்த சண்முகம் (34) என்பவர் மொபட்டில் வந்தார். இந்த இரு மொபட்டுகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
தீயில் கருகி பலி
இதில் கவிரஞ்சனி ஓட்டி வந்த மொபட் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது. இதில் அவரது உடலிலும் தீப்பற்றி பரவியது. இதில் உடல் கருகி படுகாயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிரஞ்சினி நேற்று இறந்தார்.
இதனிடையே விபத்தில் கீழே விழுந்து லேசான காயமடைந்த ஹேமலதா மற்றும் சண்முகம் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.